திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்கள் வாழாத
பகுதிகளில் 44 விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(26.04.2025) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்று சொல்லப்படும் விடயங்களை
திரிவுபடுத்தி இந்த நாட்டில் தமிழரசுக்கட்சியின் பிரச்சினை வேறு தமிழ்
மக்களின் பிர்சினை வேறு என்ற வகையிலான நகர்த்தல்களை இந்த அரசாங்கம்
முன்னெடுத்துவருகின்றது.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள்
2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் அநுரகுமாரவுடன்
இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன்
இருந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால், வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்து ஏனைய ஏழு
மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காகவே அரசியலில்
ஈடுபடுகின்ற தமிழினத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்ட பேரினவாத
அரசாங்கக் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது என்பது தமிழ் மக்களுக்கு ஒரு
ஆபத்தான நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.
இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி
தேசிய மக்கள் சக்தியினுடைய ஜனாதிபதியும் அந்த அரசாங்கத்தினுடைய அமைச்சர்களும்
புதிதாக விளக்கங்களை அளித்து வருகின்றார்கள்.
இந்த நாட்டின் தமிழ் மக்களுடைய
பிரச்சினை சோறும் நீரும் மாத்திரம் தான் என்று இந்த அரசாங்கத்தினர் மறைமுகமாக
சொல்லிவருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
