செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.
ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றையதினம்(12) நடைபெற்ற தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ,
போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல
நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல.
அகழ்வு திட்டம் தாமதம்
ஆனால், அரசாங்கம் நிதியை கால
இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே விடுவித்து வருகிறது.
செம்மணிப் புதைகுழிகளில் இருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் எலும்புக்கூடுகள்
ஒரேயடியாக வெளிப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை.
அவ்வாறு வெளிப்படுவது,
படைத்தரப்பை ஒருபோதும் தண்டிக்க விரும்பாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு
உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
இதனாலேயே,
நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே
தாமதிக்கப்படுகிறது.
தமிழின அழிப்பு
இப்போது, இனவழிப்பின்
சாட்சியங்களாக செம்மணிப் புதைகுழிகளில் இருந்து
இருநூறுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் எழுந்து நிற்கின்றன.
தமிழின அழிப்பு
நிகழ்ந்தது என்பதற்கான சாட்சிகள் பலர் இன்னமும் உள்ளனர். அவர்களால் பயத்தின்
காரணமாகத் தங்களை வெளிப்படுத்த இயலவில்லை.
ஆனால், உயிருள்ள அந்த
சாட்சியங்களைவிட உயிர் இல்லாத எலும்புக்கூடுகள் வலுவான சாட்சியங்களாக இன்று
எழுந்து நிற்கின்றன.
காலம் எங்களுக்குத் தந்திருக்கும் இந்த வாய்ப்பையாவது
எமது தமிழ்த் தலைமைகள் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
