இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகனை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிவமோகனை தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநிறுத்தி, அந்த நடவடிக்கைகள் தொடர்பாக
அவரிடம் இருந்து விளக்கம் கோரும் முடிவைக் கட்சியின் மத்திய குழு அண்மையில்
எடுத்திருந்தது.
அதற்கு எதிராக கடந்த 22ஆம் திகதி யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் சிவமோகன்
சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
வழங்கப்பட்ட தீர்ப்பு
அந்த வழக்கில் தமக்கு எதிராக கட்சிக்குள் எடுக்கப்பட்டிருந்த இடைநிறுத்த
உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கும்படி சிவமோகன் கோரியிருந்தார்.
சட்டத்தரணி குருபரனினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அவர் முன்னிலையாகி
நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார். ஒரு தரப்பாக சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களை
செவிமடுத்த நீதிபதி எஸ்.சதீஸ்கரன் உத்தரவு வழங்குவதை ஒத்திவைத்திருந்தார்.
குறித்த உத்தரவு நேற்று வழங்கப்பட்ட நிலையில், அதில் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட வழக்கு
அத்துடன், அத்தகைய வழக்குக்கான அடிப்படை ஏதும் இல்லை என்ற முடிவையும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றார்.
எனினும், எதிராளிகளுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை பெப்ரவரி
22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
