இலங்கையில் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச பொறிமுறையை
நிராகரித்துள்ள அரசாங்கம், சுயாதீன நீதித்துறை மற்றும் பொலிஸ் துறை தொடர்பில்
பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட இந்த நடைமுறைகளே, பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கான ஒரு நியாயமான செயல்முறையை அனுமதிக்கும் என்று அரசாங்கம்
தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறல் திட்டம்
இந்தப் பிரச்சினைகளை சுயாதீனமான முறையில் தீர்க்கும் அரசாங்கத்தின் திறனில்
சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை வளர்ந்து வருகிறது.
எனவே நீதித்துறையிலோ அல்லது பொலிஸ் துறையிலோ இனி அரசாங்கத்தின் தலையீடு
இருக்காது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த புதுப்பிப்பு, கடந்த
வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சிறிது
நேரத்திலேயே, இலங்கை வெளியுறவு அமைச்சரின் கருத்துகள் வெளியாகியுள்ளன.
மனித உரிமைகள் பேரவை
இதேவேளை, மனித உரிமைகள் பேரவைக்குள் வெளிப்புற ஆதாரங்களைச் சேகரிக்கும்
பொறிமுறையை அமைப்பதை இலங்கை நிராகரித்துள்ளது.
இது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடமைகளுக்கு புறம்பானது என்றும் ஸ்தாபகக்
கொள்கைகளுக்கு முரணானது என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர், இந்த ஆண்டு செப்டம்பரில்
இடம்பெறவுள்ள அமர்வுகளில் இலங்கை குறித்த விரிவான அறிக்கையை
சமர்ப்பிக்கவுள்ளார்.