காசா (Gaza) போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை (Ministry of Foreign Affairs) வெளியிட்டுள்ளது.
பிணைக் கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காசா பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும், காசா பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அனுமதிக்கும் வகையில், போர் நிறுத்த ஒப்பந்தம் நிலையானதாக இருக்கும் என்று இலங்கை (Sri Lanka) நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பலஸ்தீனத்திலும் (Palestine) அப்பிராந்தியத்திலும் மிக விரைவில் அமைதி நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – காசா போர்
இஸ்ரேல் – காசா இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி போர் ஆரம்பமானஅன்று இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் (Hamas) அமைப்பு 1200க்கும் மேற்பட்டோரை சுட்டுக்கொன்றதுடன் 250 இஸ்ரேலிய மக்களை பணையக் கைதிகளாக பிடித்து சென்றது.
இதன் காரணமாக இஸ்ரேல், காசா மீது போர் தொடுத்த நிலையில் ஹமாஸ் படையினரை குறி வைத்து தொடர்ந்து கடந்த 15 மாதங்களாக காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வந்தது.
இந்த தாக்குதலில் இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
காசா நகரத்தில் உள்ள குடியிருப்புகள் கட்டிடங்கள் என அனைத்தையும் இஸ்ரேல் படைகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ள நிலையில் இஸ்ரேல் காசா இடையே போர் நிறுத்தத்தை மேற்கொள்ள உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.