Home இலங்கை பிரித்தானியாவில் நுழையத் தடை! டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ஏதிலிக்கு நேர்ந்த சோகம்

பிரித்தானியாவில் நுழையத் தடை! டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ஏதிலிக்கு நேர்ந்த சோகம்

0

பிரித்தானிய இந்து சமுத்திர பிராந்திய (BIOT) நிர்வாகத்தினால் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் சுமார் ஐந்து ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 36 வயதான இலங்கைத் தமிழ் ஏதிலியொருவர், ஆபிரிக்க நாடான எஸ்வாட்டினியின் (Eswatini) எம்பபானே (Mbabane) நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் உயிரை மாய்த்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

89 தமிழ் ஏதிலிகள்

கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து படகு மூலம் பயணித்த 89 தமிழ் ஏதிலிகள் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலுள்ள டியேகோ கார்சியா தீவுக்கு அருகில், நிர்க்கதியான நிலையில்,அங்குள்ள கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான இந்த இலங்கையர், இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி ஏதிலி அந்தஸ்து கோரியிருந்தார்.

இதனால், அவருக்குச் சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட்டதால் அவரை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப முடியாத நிலை காணப்பட்டது.

எனினும், தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் மற்றொரு ஏதிலி மீது பாலியல் தாக்குதல் நடத்தியமை, உயிர்மாய்ப்புக்கு முயற்சியைத் தடுக்க வந்த பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியமை மற்றும் தீ வைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவாகியிருந்தன.

இதன் காரணமாக, டியாகோ கார்சியாவில் தங்கியிருந்த ஏனைய ஏதிலிகள் பலருக்கு 2024 ஆம் ஆண்டு இறுதியில் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இவருக்குப் பிரித்தானியாவுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில், தடுப்பு முகாமில் அவர் பலமுறை உயிர்மாய்ப்பு செய்ய முயன்றுள்ளார்.

இதன் காரணமாக, அவர் சுமார் எட்டு மாதங்கள் துணி துவைக்கும் அறையிலும், இயற்கை வெளிச்சம் இல்லாத பொலிஸாரின் சிறைக் கூடத்தில் இரண்டு வாரங்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்.

 பிரித்தானியாவுக்குள் நுழைய தடை 

அவரது தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் முகவரகம் தனது கவலையை வெளியிட்டிருந்ததோடு, மனிதநேயமற்ற முறையில் அவர் நடத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்தநிலையில், பிரித்தானியாவுக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முடியாத சூழலில், பிரித்தானிய அரசாங்கத்துக்கும் ஆபிரிக்க நாடான எஸ்வாட்டினி அரசாங்கத்துக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், அவர், ஆபிரிக்க நாடான, எஸ்வாட்டினிக்கு நிரந்தரமாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, பிரித்தானிய அதிகாரிகளால் சர்வதேசப் பாதுகாப்பு அளிக்கப்பட்ட ஏதிலி ஒருவர், வேறொரு நாட்டில் நிரந்தரமாகக் குடியமர்த்தப்பட்ட முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

இதேவேளை, உயிர்மாய்ப்பு செய்துகொண்ட தினத்தன்று இந்தியாவில் உள்ள தனது தாயாருடன் தொலைபேசியில் உரையாடிய அவர், தீவிர மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் தற்போது எஸ்வாட்டினியின் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

இந்த கட்டத்தில் மேலதிக கருத்துக்களைத் தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Source: https://tamilwin.com/article/sri-lankan-tamil-refugee-sent-britain-eswatini-die-1790502689

NO COMMENTS

Exit mobile version