Home இலங்கை அரசியல் தமிழ்த் தரப்புடன் பேசத் தயார்: ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியதாக சுமந்திரனிடம் சுவிஸ் தூதுவர் தெரிவிப்பு

தமிழ்த் தரப்புடன் பேசத் தயார்: ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியதாக சுமந்திரனிடம் சுவிஸ் தூதுவர் தெரிவிப்பு

0

இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (சமஷ்டி) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்
கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் சுவிட்ஸர்லாந்தில்
ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்து கொண்ட ஆளும் தேசிய மக்கள்
சக்தியின் பிரதிநிதிகள் கூறினார்கள் என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து
தூதுவர் சிறி வோல்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்தார்.

இலங்கை – சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து
சுவிட்ஸர்லாந்து அரசின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை
மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும்
எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத்
தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த செப்டெம்பர் மாதம் 14 – 21ஆம்
திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.

செயலமர்வில் கலந்து கொண்டவர்கள்

அந்தச் செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி
பன்னிலகே, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய
மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற
உறுப்பினர்களான சந்திம ஹெட்டியராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க
ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத்
தமிழ்க் காங்கிரஸின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயகத் தமிழ்த்
தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னிணியின்
உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும்
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்புச் செயலாளருமான
கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்து கொண்டனர்.

இந்தச் செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு
உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (சமஷ்டி) முறைமையை ஆழமாகப்
புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் இதனுடன் தொடர்புடைய
முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள்
என்பனவும் இடம்பெற்றன.

அதேவேளை, இந்தச் செயலமர்வின் ஓரங்கமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பில்
கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க, 2015 –
2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு
வரைவு மீளக்கொண்டு வரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய
திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து
ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சந்திப்பு

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தச் செயலமர்வு தொடர்பில் விளக்கமளிக்கும்
நோக்கில் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ட்டின் அழைப்பின்
பேரில் நேற்று கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நடைபெற்ற
சந்திப்பின்போது மேற்படி செயலமர்வு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (சமஷ்டி) அறிமுகப்படுத்துவது குறித்து
தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகச் செயலமர்வில் கலந்துகொண்ட
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறினார்கள் என்று தூதுவர் சிறி
வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கு நேரம்
ஒதுக்கித்தருமாறு தாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ள போதிலும், அதற்கு இன்னமும்
பதில் கிட்டவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் இது குறித்து சுவிட்ஸர்லாந்தில் நடாத்தப்பட்ட செயலமர்வில்
கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் பேசுவதற்குத் தாம் தயாராக
இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version