தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் அவர்களை அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பகடைக்காயாக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(11.11.2025) உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மக்களுக்கு பல வாக்குறுதிகள்
“முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாசவை போன்று தமிழ் மக்களுக்கு எவரும் சேவையாற்றவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது.
கடந்த ஆட்சியாளர்களை போன்று நாங்கள் செயற்பட மாட்டோம் என்றும் குறிப்பிட்டது.
ஆனால் தற்போது முற்றிலும் எதிர்மறையாக செயற்படுகிறது.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய தரப்பினரை போன்று தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது.
எவ்வித கொடுப்பனவுகளையும் பெற போவதில்லை என்று குறிப்பிட்டவர்கள் சகல கொடுப்பனவுகளையும் இரகசியமாக பெற்றுக்கொள்கிறார்கள்.
அரசியல்வாதிகளுக்கு அரசியலமைப்பால் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள் அதில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் மக்களை ஏமாற்றியது தான் தற்போது பிரச்சினையாக உள்ளது” என்றார்.
