Home இலங்கை சமூகம் வடக்கு மாகாணத்திற்கான ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் தொடர்பில் ஆளுநரின் அறிவிப்பு

வடக்கு மாகாணத்திற்கான ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் தொடர்பில் ஆளுநரின் அறிவிப்பு

0

வடக்கு மாகாணத்திற்கான ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதும் எந்தவொரு ஆசிரியரும் மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் என வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

இந்த மேன்முறையீடு காலம் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆசிரியர்களின் நலன்கருதி எதிர்வரும் 27ஆம் திகதி (27.10.2025) வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிரிய சேவையின் தேவை கருதி ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ளது.

மேன்முறையீடுக்குழுவால் உரிய நிவாரணம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை (15.10.2025) நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீட்டுக் குழுவால் ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மேன்முறையீடும் உரிய முறையில் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீடுக் குழுவால் உரிய நிவாரணம் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என கருதுவும் எந்தவொரு ஆசிரியரும் முறையே மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு, ஆளுநருக்கு மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்ற விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version