Home இலங்கை கல்வி 8 இலட்சம் ரூபா பெறுமதியான தரம் 01-க்கான பாடப்புத்தகத் தொகுதி மாயம்

8 இலட்சம் ரூபா பெறுமதியான தரம் 01-க்கான பாடப்புத்தகத் தொகுதி மாயம்

0

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை என காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் 12 விநியோக நிலையங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தமிழ் மொழி தரம் 01, மூன்றாம் தவணைக்கான பாடப்புத்தகளே இவ்வாறு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

சுமார் 08 இலட்சம் ரூபா பெறுமதியான 19,892 செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் இவ்வாறு ஒப்படைக்கப்படவில்லை என இசுறுபாய கல்வி அமைச்சில் அமைந்துள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உற்பத்தி மற்றும் விநியோக ஆணையாளர் என்.டபிள்யூ.டி. ஹிரோஷி குணவர்தன செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 விநியோக நிலையங்கள்

குறித்த புத்தகத் தொகுதியை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்வதற்காக, பியகம, சியம்பலாபே, சம்ருத்தி மாவத்தையில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊடாக ஒப்பந்த அடிப்படையில் டஸ்மா இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2026.05.04 அன்று WP 43-9874 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட லொறியில், அதன் சாரதியின் பொறுப்பில் குறித்த புத்தகத் தொகுதியை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 விநியோக நிலையங்களுக்கும் குறித்த பாடப்புத்தகங்கள் மற்றும் செயற்பாட்டு புத்தகங்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவில் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான ஜகத் வன்னிஹாரச்சி என்பவர் கடந்த 07ஆம் திகதி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் நம்பிக்கை மோசடி தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலங்கம காவல்நிலைய பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் நிஷங்க சில்வாவின் ஆலோசனையின் பேரில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://ibctamil.com/article/textbook-for-grade-01-magic-1786690289

NO COMMENTS

Exit mobile version