தமிழ் அரசியல்வாதிகளின் தன்னகம்பாவம் நீங்கும் வரை தமிழ்த் தேசிய அரசியல்
என்பதற்கு எதிர்காலமே இல்லை என்று உளநல வைத்திய நிபுணர் சி. சிவதாஸ்
தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதித் தொகுத்த “தமிழ்த்
தேசியவாத அரசியலின் எதிர்காலம்” என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து
கொண்டு உரையாற்றிய போதே உளநல வைத்திய நிபுணர் சி. சிவதாஸ் இவ்வாறு
தெரிவித்தார்.
இந்நூலின் வைளியீட்டு விழா, கடந்த 18ஆம் திகதி, சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம்
தந்தை செல்வா கலையரங்கில், சட்டத்தரணி சோ. தேவராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம உரையாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றிய உளநல
வைத்திய நிபுணர் சி. சிவதாஸ், அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கறுப்பு – வெள்ளை மனநிலை
“தமிழ் அரசியல் தலைவர்களிடம் காணப்படும் தன்னகம்பாவமே இன்று வரை எமக்குத்
தீர்வொன்று கிடைக்காததற்குக் காரணமாகும். அரசியல்வாதிகள் என்றில்லை, எங்கள்
அனைவரிடமும் தன்னகம்பாவமே தலைதூக்கிக் காணப்படுகிறது.
பொதுவாக நாங்கள் எல்லோருமே கறுப்பு – வெள்ளை மனநிலையிலேயே இருக்கிறோம்.
கறுப்புக்கும், வெள்ளைக்கும் இடையில் “கிறே” நிறமென்று ஒன்று இருப்பதை யாருமே
ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அதாவது விட்டுக்கொடுப்பு – இணங்கிப்போதல்
மனநிலை என்பது யாரிடமும் அறவே இல்லை.
இன்றைய நிலையில் போருக்குப் பின்னரான இந்தக் காலப்பகுதியில் தமிழர்களில்
பெரும்பாலானவர்கள் வாழ்வதற்காக வாழவில்லை, வாழ்வாதாரத்துக்காகவே வாழுகிறோம்
(லிவிங் போஃர் செவைவல் நொட் போஃர் லைஃவ்).
போருக்குப் பின்னரான அல்லது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னரான
காலப்பகுதியில் எமது மக்களுக்கு மிக அவசியமானது குணமாக்கல் ஆகும்.
தேசியத்துக்கான எதிர்காலம்
சமூகத்தில்
காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகளைக் குணப்படுத்தாமல் தேசியத்துக்கான
எதிர்காலம் பற்றிப் பேசிப் பலன் இல்லை.
இங்கே அரசியல்வாதிகள் பலர் இருக்கிறார்கள். நான் யாரையும் குத்திக்
காட்டுவதற்காக இதைச் சொல்லவில்லை.
ஆரம்பத்தில் உளப்பாதிப்பு என்பது ஒரு நோய் நிலையாக இருந்தது. போர்
முடிவடைந்ததும் அது இடைத்தங்கல் , புனர்வாழ்வு முகாம்களை மையப்படுத்தி
அதிகரித்தது, அதன் பின் போதைப் பாவனை, சிறைச்சாலைகளிலும், குடும்பங்களின்
பிளவுகளிலும் சுழன்று கொண்டு நிற்கிறது.
மக்கள் தேசியத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர் குணமாக்கல் மேறகொள்ளப்பட
வேண்டும்” என்றார்.
இந்த நூல் வெளியீட்டின் போது, பொறியியலாளர் சு.சிவக்குமார், சமூக
செயற்பாட்டாளர் சி. கருணாகரன் ஆகியோரும் உரையாற்றினர்.
தேசிய மக்கள் சக்தியின் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இ. சந்திரசேகர்,
நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் வடக்கு மாகாணசபை அவைத் தலைவரும்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான சி.வி.கே. சிவஞானம், இலங்கைத்
தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
எம்.ஏ.சுமந்திரன் உட்பட அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து
கொண்டனர்.
