மாத்தறை (Matara) வலயத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை வலய பதில் காவல்துறை அத்தியட்சகர் ஊடாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் மாத்தறை, வல்கம பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்திற்குச் சென்று முகாமையாளருடன் கடுமையான வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் அவரது சேவைகளை இலவசமாகப் பெறவும் முயன்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு
இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் நன்னடத்தையை பாதிக்கும் வகையில் தனிப்பட்ட இலாபத்திற்காக காவல்துறை பதவியைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான நடத்தையில் ஈடுபட்டு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக மேற்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இவர்களில் மாத்தறை வலய புலனாய்வு பிரிவில் பணியாற்றும் ஒருவரும் திஹகொட மற்றும் மாவரல காவல் நிலையங்களில் பணியாற்றும் இரு அதிகாரிகளுமே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாத்தறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

