அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாகப் பெரிதும்
பாதிக்கப்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு A15 பிரதான வீதியைச் சீரமைக்கும்
பணிகள் இன்று (3) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தத்தால் துண்டிக்கப்பட்டிருந்த மூதூர் பிரதேசம் மீண்டும் இயல்பு
நிலைக்குத் திரும்புவதற்கான அதிரடி நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள்
இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழை
கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால், A15 வீதி பலத்த சேதமடைந்தது. குறிப்பாக,
முதூர் பிரதேசம் கடந்த ஐந்து நாட்களாக வெளி உலகத்துடனான தொடர்பை முற்றிலுமாக
இழந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், மூதூர் இறால்குழி பிரதேசத்தில், சுமார் 800 மீட்டர் தூரமான வீதி
வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது வாகனப் போக்குவரத்து
செய்ய முடியாத அளவுக்குக் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது.
இந்த நிலையில், துண்டிக்கப்பட்டிருந்த மூதூர் பிரதேசத்தை மீண்டும் இயல்பு
நிலைக்குக் கொண்டுவரும் நோக்கில், அரசாங்கம் போர்க்கால அடிப்படையில்
சீரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளது.
இந்த வீதி சீரமைக்கும் பணிகள் அனைத்தும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
மற்றும் வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் நேரடி
கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இயல்பு வாழ்க்கை
இதன்போது, மூதூர் 223 வது
இராணுவ படைப்பிரிவின் கட்டளை தளபதி இந்திக்க குணவர்த்தன, கிண்ணியா 15 வது மைல்
ராணுவ பொறுப்பதிகாரி கேனல் குமார,
மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல். பி.
ஜெயவர்த்தன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
சீரமைப்புப் பணிகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண்
ஹேமச்சந்திரா, “இன்றைய தினம் இன்னும் சில மணி நேரங்களில் சீரமைக்கும் பணிகள்
நிறைவுபெறும்.
அதன் பின்னர் இன்றைய தினமே மக்கள் போக்குவரத்திற்காக
இந்த வீதியைப் பயன்படுத்த முடியும் எனவும்” நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் மூலம், ஐந்து நாட்களாகத் துண்டிக்கப்பட்டிருந்த பிரதேசம் மீண்டும்
இணைக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
