Home இலங்கை சமூகம் திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரம்: மக்களின் எதிர்பார்ப்பு

திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரம்: மக்களின் எதிர்பார்ப்பு

0

நாட்டில் இன, மத ஒற்றுமை என்ற நிலையில் பேசப்பட்டாலும் இனவாதத்தை தூண்டி
விட்டு நாட்டை நாசமாக்குவதற்கு துணை போகும் நிலை அரங்கேறுவதை தவிர்க்க
முடியாததாக காணப்படுகிறது.

திருகோணமலை டச்பே கடற்கரை பகுதியில் அண்மையில் சட்ட விரோதமாக புத்தர் சிலை
வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கரையோர பாதுகாப்பு
திணைக்களம் இதனை நிறுத்திய போதும் இரவோடு இரவாக பௌத்த துறவிகள் இணைந்து
குறித்த பகுதிக்குள் புத்தர் சிலையை வைத்ததால் பெரும் பதற்ற நிலை அங்கு
உருவானது. திருகோணமலை துறை முகப் பொலிஸாரால் இது நிறுத்தப்பட்ட நிலையில்
புத்தர் சிலை எடுத்துச் செல்லப்பட்டது.

ஆனந்த விஜேபால கூறிய விடயம் 

மறு நாள் மீண்டும் பொது மக்கள்
பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

“பாதுகாப்பு காரணம் கருதியே புத்தர் சிலை அகற்றப்பட்டது அது மீண்டும்
வைக்கப்படும் என கூறியிருந்தார்.
மீண்டும் 17.11.2025 ந் திகதி அன்று பொலிஸாரின் பாதுகாப்புடன் அதே இடத்தில்
சிலை வைக்கப்பட்டது.
சட்டத்தை மீறிய வகையில் இவ்வாறாக தமிழர் தாயகங்களில் சிலை வைப்பு விவகாரம்
என்பது சாதாரணமாக நிகழ்கின்றது. இது பற்றி தமிழ் கட்சிகளை சேர்ந்த பல
பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் பல கருத்துக்களை கூறியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர்
திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு இனவாத கருத்துக்களை கூறியிருந்தார்.
நாட்டில் இனவாதமற்ற நிலை ஒழிக்கப்படும் என ஜனாதிபதி ஆரம்பம் தொட்டே கூறி
வந்தார்.

ஆனால் வடகிழக்கு தமிழர்களின் தனியார் காணி அபகரிப்புக்கள் புனித பூமி என்ற
போர்வையில் அபகரிக்கப்படுகிறது.

குறித்த திருகோணமலை சிலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில்
உரையாற்றியிருந்தார்.”

நாட்டில் இனவாதத்தை தோற்றுவிக்க யாராவது முயற்சி
செய்தால் அதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை
எடுப்பதாக கூறினார்.

வலுவடையத் தொடங்கிய சம்பவம்

சட்டவிரோதமாக திருகோணமலை மாநகர சபைக்கு சொந்தமானதும் கரையோர பாதுகாப்பு
திணைக்களத்துக்குட்பட்ட பகுதிக்குல் புத்தர் சிலையை மேற்கொண்ட போது இச்
சம்பவம் மேலும் வலுவடையத் தொடங்கியது.

இவ்வாறான நிலையில் இச் சம்பவங்கள் பற்றி பலரும் பல கருத்துக்களை கூறி
வருகின்றனர்.

இது குறித்து திருகோணமலையை சேர்ந்த அரசியல் ஆய்வாளரான
ஏ.யதீந்திரா கூறுகையில்
“வடக்கு, கிழக்கில் புத்தர் சிலை விவகாரம் புதிய விடயமல்ல – தமிழர் தேசிய இனப்
பிரச்சினை கூர்மயடையத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்தப் பிரச்சினையும்
தொடர்கின்றது.

இவ்வாறான பின்புலத்தில் தான் திருகோணமலை கடற்கரைக்கு
அருகாமையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரத்தையும் நோக்க
வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதமற்ற ஆட்சியொன்றை முன்னெடுப்பதாக
கூறி வரும் நிலையில் தான் குறித்த புத்தர் சிலை விவகாரம் அதிக கவனத்தை
பெற்றிருக்கின்றது.

அரசாங்கம் ஆரம்பத்தில் இந்த விடயத்தை சட்டத்தின்
அடிப்படையிலேயே கையாண்டிருந்தது. புத்தர் சிலையை அகற்றுமாறும்
உத்தரவிட்டிருந்தது. ஆனால் தென்னிலங்கையின் எதிர்க் கட்சிகள் அனைத்தும்
ஓரணியில் நின்று இனவாத அரசியலுக்கு புத்துயிரளிப்பதற்கான பிரச்சாரங்களை
முன்னெடுத்த போது, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. என்னைப்
பொறுத்த வரையில், இந்த விடயத்தில் சஜித் பிரேமதாசவின் இனவாதப் போக்குத்தான்
தமிழ் மக்களை பொறுத்தவரையில் முக்கியமானது.

சில விடயங்களில் முன்னேற்றம்

தன்னை சிறுபான்மை மக்களுக்கு
ஆதரவானவர் போன்று காண்பித்துக் கொள்ளும் பிரேமதாச இனவாத ஓட்டப் பந்தயத்தில்
நான் தான் முதலாவது என்பது போன்றே நடந்து கொண்டிருக்கின்றார்.

ஒப்பீட்டடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில விடயங்களில்
முன்னேற்றகரமானதாக இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால்
அதற்காக அவர்கள் ஒரே பாய்ச்சலில் சிங்கள பௌத்த தேசியவாதக் கட்டமைப்பிலிருந்து
வெளியில் வந்து விடுவார்கள் என்று எண்ணினால் அதுவும் தவறானது.
புத்தர் சிலை விடயத்தில் இது வரையில் எத்தனையோ எதிர்பார்ப்புக்கள்
காண்பிக்கப்பட்ட போதிலும் கூட, அதனால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
உண்மையில் தமிழ் எதிர்ப்புக்கள், இறுதியில் சிங்கள பௌத்த கட்டமைப்புக்களை
மேலும் பலப்படுத்தவே பயன்பட்டிருக்கின்றன.

என்னை பொறுத்தவரையில் தமிழர்கள்
தங்களின் ஆற்றல் அறிந்து சத்தம் போட வேண்டும். இதனை கண்டும் காணாமல்
விடுவதுதான் புத்திசாதுர்யமானது. ஏனெனில் நீங்கள் எதிர்த்தால் இன்னும்
தீவிரமாக பௌத்தமயமாக்கல் நிகழ்வதற்கான வாய்ப்பே அதிகமாகத் தெரிகின்றது. இந்த
விடயத்தில் தென்னிலங்கை கட்சிகள் அனைத்தும் ஓரணியில்தான் நிற்கும்.

அதேவேளை
இந்த விடயத்தில் இந்தியாவின் ஆதரவோ அல்லது மேற்குலக நாடுகளின் ஆதரவோ தமிழரின்
பக்கமாக இருக்காது . அவர்களைப் பொறுத்தவரையில் இதனை ஒரு உள்ளக விடயமாகவே
நோக்குவார்கள்.

எனவே தமிழ் மக்கள் ஒப்பீட்டடிப்படையில் தான் விடயங்களை நோக்க வேண்டும். இதனை
குறைந்தளவு பிசாசுத் தன்மை என்று கூறுவதுண்டு.

அனைத்து கட்சிகளுமே
பிரச்சினைக்குரியதுதான் ஆனால் ஒப்பீட்டடிப்படையில் இன்றைய சூழலில் யார்
பொருத்தமான ஆட்சியாளர் என்பதை உற்று நோக்க வேண்டும். அப்படிப்பார்த்தால்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
தொடர்பில் கறுப்பு வெள்ளையாக விடயங்களை நோகாகக் கூடாது எனவும் மேலும்
தெரிவித்திருந்தார்.

புத்தர்சிலை வைக்க முயற்சி

இச் சம்பவம் பற்றி திருகோணமலையை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்
கு.செந்தூரன் தெரிவிக்கையில், “திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு
அரங்கேற்றப்பட்டது. கடலோரப் பிரதேசங்களில் இடம் பெற்ற கட்டுமானங்களை
அகற்றக்கோரிய இடத்தில் தற்போது அடுத்த கட்டமாக பிக்குமாரால் அடாத்தாக புத்தர்
சிலை வைக்க முற்பட்டனர்.

அதனடிப்படையில் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் பல
அழுத்தங்களை கொடுத்து பிறகு இரவு பாதுகாப்பு படையினரால் அகற்றப்பட்டது.
இப்போது மாற்றீடான அழுத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த
விஜேபால கூறியதாவது புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதியே அகற்றப்பட்டது
மீண்டும் அதே இடத்தில் சிலையை வைப்போம் என்று.

புத்தர் சிலை வைப்பது
திருகோணமலைக்கு புதிதான விடயமல்ல எத்தனை ஆயிரம் புத்தர்கள் வைத்து
ஆயிரக்கணக்கான மக்களையும் கொன்று புதைத்து அடாத்தாக இடங்களை பிடிக்கும்
செயலாகவே நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம்.இப்போதும் புதிய அரசாங்கம்
எமக்கு தீர்வு தரப்போகின்ற அரசாங்கம் அல்லது மிகப் பெரும்பான்மையுடன்
இனவழிப்புகளுக்கு எதிரான அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற அநுர அரசாங்கம் கூட
மகாநாயக்க தேரர்களினதும் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகளினதும் எடுபிடிகளாகவே
இருக்கின்றனர் என்பதை தற்போதைய நிகழ்வுகள் காட்டுகிறது.

ஆகவே எந்த தமிழர்களுமே
இந்த சிங்கள அரசாங்கங்களை நம்புவதற்கு தயாராகவில்லை. முதலில் வலியுறுத்தியது
போல எந்த மக்கள் அல்லது எந்த ஊடகங்கள், வெளிநாட்டு அமைப்புக்கள் சிங்கள
டயஸ்போராக்கள் கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக ஆக்கினார்களோ அதே அவர்கள்
ஜே.வி.பி எனும் அரசாங்கத்தை அதே முகத்துடன் தேசிய மக்கள் சக்தியை நாட்டின்
ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

அரசாங்கள் மாறுகின்றன கட்சிகள் மாறுகின்றன ஆனால்
காட்சிகள் மட்டும் தமிழர்களுக்கு எதிராகவும் அல்லது தமிழ் தேசியத்துக்கு
எதிராகவும் தமிழின மக்களுக்கு நியாயம் கொடுக்க முடியாத அரசாங்கமாக இன்று
வரைக்கும் இருந்து கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.

இது இவ்வாறிருக்க திருகோணமலையில் மூவின சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழவும் சமூக
நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் அநுர குமார அரசாங்கம் வழியமைக்க வேண்டும் என்பதே
மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

NO COMMENTS

Exit mobile version