நாட்டில் கோவிட் தொற்று பரவலின் பின்னர் இந்த காச நோயின் பரவல் வீதம் மேலும் அதிகரித்துள்ளதாக காச நோய் மற்றும் மார்பக நோய்களுக்கான தேசியத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் நூற்றுக்கு 46 சதவீதமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 9,500 இற்கும் அதிகமான காச நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் நூற்றுக்கு 25 சதவீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம் அடையாளம் காணப்பட்ட காச நோயாளர்களின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுக்கு இணையானதாகும் என்று காச நோய் மற்றும் மார்பக நோய்களுக்கான தேசியத் திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார்.
இந்த காச நோயினால் அதிகளவில் ஆண்களே பாதிக்கப்பகிறனர் என்பதுடன் புகைத்தல், மதுபானம் பயன்படுத்துதல் இதற்கு பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சடுதியாக அதிகரித்த காச நோயாளர்கள்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“கடந்த 2019 மற்றும் 2020 ஆகிய இரு வருடங்களில் கோவிட் பரவல் அதிகரித்து காணப்பட்டதால், காச நோயாளர்களை அடையாளங்காணும் வீதம் குறைவாக இருந்தது.
எனினும், அந்த எண்ணிக்கையில் தற்போது சற்று அதிகரிப்பு ஏற்பட்டதுடன் 2023 ஆம் ஆண்டில் 9,538 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றுப் பரவலுக்கு முன்னர் இருந்த காச நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 2012 ஆம் ஆண்டில் இருந்த நோயாளர்களின் எண்ணிக்கையை மீண்டும் அடையக் கூடியதாகவுள்ளது.
கோவிட் தொற்று பரவல் காலத்தில் கவனிக்காமல் விட்ட நோயாளர்களின் எண்ணிக்கையே இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு காச நோயாளர்களின் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட போசாக்குப் பிரச்சினையும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.
2023 ஆம் ஆண்டு மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான காச நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் மொத்த சனதொகையில் ஒரு இலட்சத்துக்கு 42 சதவீத நோயாளர்கள் பதிவாகும்போது கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் ஒரு இலட்சம் சனதொகைக்கு 174 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.