நாடளாவிய ரீதியில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்
பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
யாழ்ப்பாண மாவட்டம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/45 கிராம சேவகர்பிரிவில் பலத்த காற்று காரணமாக வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்றையதினம் (24.10.2025) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
