செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை
வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தெற்கு, மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடமராட்சி தெற்கு, மேற்கு கரவெட்டி பிரதேச
சபையில் சபை அமர்வு நேற்று (23) காலை 9.00 மணியளவில் தவிசாளர் கு.
சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்
கோரிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக தவிசாளர்களினால் முன் மொழிவு
மேற்கொள்ளப்பட்டது.
மனித புதைகுழி
1)செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழி தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்பு கூறல் செயல் திட்ட
அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியான உள்ளிட்டை வழங்கவும் காணிப்பில் ஈடுபடவும்
இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
2) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 46/1 தீர்மானத்திற்கு அமைய
இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்
தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்
அலுவலகத்தில் கீழியங்கும் இலங்கை பொறுப்பு கூறல் செயல் திட்ட அதிகாரிகள் தங்கு
தடையற்ற வசதிகளை அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும்.
3) மனித புதைகுழி அகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தமது சமூகத்தின்
வளங்களை பெற்று அதன் மூலம் சுதந்திரமான தொழில்நுட்ப உள்ளிட்டை பெற்றுக்கொள்ள
இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமாறு அழுத்தம் வழங்கப்பட வேண்டும்.
4)புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றதால் கோரப்படும்
அனைத்து நிதிக் கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
5) இதுவரை வெளிவந்த தகவல்களின் பிரகாரம் அனைத்து புதைகுழிகளிலும் சர்வதேச
கண்காணிப்புடனான அகழ்விற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை
6)இலங்கையில் பொறுப்பு கூறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையின் ஊடாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு விடயம் பாரபடுத்தப்பட்டு அதன்
ஊடாக சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றை சாத்தியப்படுத்துவதற்கான வேலைப்பாட்டை
ஐ.நா மனித உரிமை ஆணையாளர், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில்
முடுக்கி விட வேண்டும் என தவிசாளர் முன்மொழிவை முன் வைத்தார்.
இதனை உறுப்பினர்
கந்தன் பரஞ்சோதி வழி மொழிய சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதே வேளை தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் பா.அஜந்தன்
தெரிவிக்கையில் மக்களின் கஷ்டங்கள் பற்றி கூறப்பட்டிருக்கிறது.
இது
பிரேரணையின் முதலாவதாக போட்டிருக்க வேண்டும். ஆனால் 18 ஆவது பிரேரணையாக
போட்டிருக்கின்றது.
இதனை முதலாவது பிரேரணையாக கொண்டு வந்து பதிவு செய்யப்பட
வேண்டும். நமது பிரதேச சபை ஆவணத்திலும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என
தெரிவித்தார்.
