முல்லைத்தீவு, முத்தையன் கட்டுப் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர்
ஒரு குழுவினருடன் இராணுவ முகாமுக்கு சென்ற நிலையில் இராணுவத்தால் அவர்கள்
விரட்டப்பட்டுள்ளனர். இதன்போது தப்பி ஓடி குளத்திற்குள் வீழ்ந்த இளம்
குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால்
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர், இரவு நேரம் அங்கு ஏன் சென்றார்?, இராணுவத்தினர்
அழைத்தார்களா?, ஒரு இராணுவ சிப்பாய் கூப்பிட்ட இடத்தில் சென்றாரா? அல்லது
திருட்டுக்கு சென்றாரா என்ற பல கோணங்களில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா
அதிபரின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
விசாரணைக்கு மத்தியில் கடையடைப்பு
ஆனால் இந்த
விசாரணைகள் இடம்பெறும் நிலையில் கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக்
கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு
விடுத்துள்ளார்.
முத்தையன்கட்டு பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும் நிலையில்
குறித்த இராணுவ முகாமில் காணப்பட்ட அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப்
பொருட்களை எடுப்பதற்காக சென்றவர்களில் ஒருவரே மரணமடைந்துள்ளார்.
இவர்கள்
திருடச் சென்றதாகவும், அவர்கள் திருடுவதற்கு உதவிய குற்றச் சாட்டில் 3
இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு 19ஆம் திகதி வரை விளக்கமறியலில
வைக்கப்பட்டுள்ளனர்.
உண்மையில், இந்தச் சம்பவத்திற்கு கதவடைப்பு போராட்டம் தேவை தானா என்ற கேள்வி
பலரிடமும் எழுந்துள்ளது. வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் தற்போது பல இந்து
ஆலயங்களினதும், கிறிஸ்தவ ஆலயங்களினதும் விசேட உற்சவங்கள் இடம்பெற்று
வருகின்றது.
சாதிக்கப் போவது என்ன?
குறிப்பாக யாழ். நல்லூர் ஆலய உற்சவத்திற்கு நாட்டின் பல பகுதிகளில்
இருந்தும் பலர் சென்று வருகிறார்கள். அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளும் வருகை
தந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் ஒரு தினத்தை முடக்குவதன் மூலம் சாதிக்கப்
போவது என்ன?
பொதுப் போக்குவரத்தை முடக்கி, வர்த்தக நிலையங்களை மூடி, நாளாந்தம் கூலி வேலை
செய்பவர்களை தடுத்து நிறுத்தி கடையடைப்பு மேற்கொள்ள முயற்சிப்பதன் மூலம்
நடக்கப் போது என்ன? இராணுவ முகாமுக்குள் சென்ற இளம் குடும்பஸ்தர் தொடர்பில்
விசாரணைகள் இடம்பெறாது அவை மறைக்கப்பட்டிருந்தால் நீதி வேண்டி ஒரு எதிர்ப்பை
காட்ட வேண்டியது அவசியமே.
ஆனால் அந்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில்
கடையடைப்பு கோரிக்கையை முன்வைப்பது என்பது அரசியல் லாபம் தேடுவதற்கே.
குறிப்பாக தமிழரசுக் கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தால கோரிக்கைக்கு ஏனைய
தமிழ தேசியக் கட்சிகள் கூட முழுமையான ஆதரவை வழங்க முன்வரவில்லை. தமிழ் சிவில்
சமூக அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் என்பன கூட உண்மை நிலை
தெரிந்து மௌனம் காத்து வருகின்றன.
நியாயமான கோரிக்கை
வட மாகாணத்தில் உள்ள முக்கியமான வர்த்தக
சங்கங்கள் கூட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என அறிவித்துள்ளன.
கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளுக்கும் ஹத்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
அதன் மூலம் சாதித்தவை என்ன?. ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைத்து முழுமையாக
கதவடைப்பில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை காட்டுவது என்பது சிறந்தது.
ஆனால் இங்கு
குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது. நீதிமன்றத்தில்
வழக்கு நடைபெறுகின்றது. இந்த நிலையில் இச் சம்பவத்தை முன் நிறுத்தி அரசியல்
இலாபம் தேட முயலும் ஒரு விடயமே கதவடைப்பு போராட்ட அழைப்பாகும்.
பல நாளாந்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பலரின் வருமானத்தை செயலிழக்கச்
செய்யும் செயற்பாடே கதவடைப்பு ஆகும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒரு
நாள் வருமானத்தில் வாழும் பல குடும்பங்கள் இருக்கின்றன.
ஹர்த்தாலினால்
அவர்களது அன்றை தினம் எவ்வாறு அமையும் என்பதையும் அரசியல்வாதிகள் சிந்திக்க
வேண்டும்.
அமைதியாக போகும் நாட்டில் அடுத்த மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அரசியல்
லாபம் தேட முயலும் செயற்பாடாகவே இந்த கடையடைப்பு அழைப்பை நோக்க வேண்டியுள்ளது.
எனவே, வர்த்தகர்கள், பொது மக்கள் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்பட முன்வர
வேண்டும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
