இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.
வெளியுறவுச் சேவை அதிகாரி
எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு சிரேஸ்ட வெளியுறவுச் சேவை அதிகாரியாவார்.
தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஸ்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் எரிக் மேயரை வரவேற்றுள்ளதோடு, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தூதரகக் குழு ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
எரிக் மேயரின் பதவிக் காலம்
வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் எரிக் மேயரின் பதவிக் காலம் கவனம் செலுத்தும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையிலேயே மேயரின் இந்த நியமனம் அமைந்துள்ளது.
புதிய தூதுவரை கொழும்பிற்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/us-appoints-eric-meyer-as-new-ambassador-to-sl-1786593173
