அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை குறிவைத்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படம் ஒன்று அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் சமீபத்தில், “சட்டத்திற்கு மேலாக யாரும் இல்லை” எனக் கூறி, ஒபாமாவை கைது செய்யும் போல உருவாக்கப்பட்ட ஏஐ காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.
இது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டதுடன், பலரிடையே கண்டனங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியிருந்தது.
மீண்டும் சர்ச்சை
இந்நிலையில், ட்ரம்ப் காரில் பயணிக்கும் ஒபாமாவை காவல்துறையுடன் சேர்ந்து துரத்தும் போல் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ட்ரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார்.

ட்ரம்பின் பதவியேற்பின்போது, அதனை தடுக்க ஒபாமா முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை (FBI) தற்போது அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஒபாமா, “ஜனாதிபதி பதவிக்கும் வெள்ளை மாளிகைக்கும் நான் காட்டும் மரியாதையின் காரணமாக அங்கிருந்து வரும் தவறான அல்லது முட்டாள்தனமான கருத்துக்களை வழக்கமாகப் பொருட்படுத்துவதில்லை,” என்றார்.
ட்ரம்பின் பாலியல் வழக்கு
அதே நேரத்தில், தற்போதைய குற்றச்சாட்டுகள் மிகவும் அபத்தமானவையாக உள்ளதால் அவற்றை முற்றிலும் புறக்கணிக்க முடியாது என்றும், இது ட்ரம்ப் எதிர்கொண்டு வரும் பாலியல் வழக்குகளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் அரசியல் முயற்சியாகத் தான் பார்க்கப்பட வேண்டும் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயமானது, அரசியல் களத்தில் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் வெளிச்சம் போட்டிருக்கிறது.

