Home இலங்கை சமூகம் வெலிகம தவிசாளர் படுகொலை: சந்தேகநபரை பகிரங்கமாக விசாரணை செய்தமைக்கு கண்டனம்

வெலிகம தவிசாளர் படுகொலை: சந்தேகநபரை பகிரங்கமாக விசாரணை செய்தமைக்கு கண்டனம்

0

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் கைது
செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரைப் பகிரங்கமாக விசாரணை செய்தமை தொடர்பில்
முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய
பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரியான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டவுடனேயே பொலிஸ்
அதிகாரிகள் அவரை விசாரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்தே
அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கைது மற்றும் குற்றப் புலன் விசாரணைகள் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட
நடைமுறைகளுக்கு அமைவாகவே நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்மறையான விளைவு

“சந்தேகநபர்களை ஊடகங்களின் முன் நிறுத்துவது, அவர்களை வாக்குமூலங்களை வழங்கச்
செய்வது மற்றும் அத்தகைய காட்சிகளைப் பரப்புவது பொதுமக்களின் ஒரு
பிரிவினருக்கு உற்சாகத்தை அளிக்கலாம்.

ஆனால், இந்த நடவடிக்கைகள் வழக்கு
விசாரணை ஆரம்பமானதுடன் இறுதியில் அரசுத் தரப்புக்குப் பாதகமாக அமையும்.” –
என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“இந்தச் சிறுபிள்ளைத்தனமான செயல்கள் பொலிஸாரின் பிம்பத்தை மேம்படுத்தாது
மாறாக, அவை எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.

இது புலனாய்வாளர்களின்
நிபுணத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதுடன், முழு அமைப்புக்கும் இழிவு தேடித்
தரும்.” – என்றும் அவர் கூறியுள்ளார்.

நீதியை உறுதிப்படுத்தவும், சட்டம் மற்றும் அமுலாக்கத்தின் மீதான பொதுமக்களின்
நம்பிக்கையைப் பேணவும், உரிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதும், விசாரணைகளின்
நேர்மையைப் பேணுவதும் மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version