கந்தளாய் பகுதியில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகளுக்கு தீ வைக்கும் நடைமுறை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது அதிக வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வயல்களுக்கு தீ வைப்பதால் தீ கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, வயல் பகுதிகளில் தீ வைப்பதால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், அதிகளவில் புகை வெளியேறுவதன் காரணமாக சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அறுவடைக்குப் பின்னர் வயல்களில் எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக வெப்பநிலை நிலவும் காலங்களில் வயல்களுக்கு தீ வைப்பதை தவிர்க்குமாறும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வயல்களுக்கு தீ வைப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
