Home இலங்கை தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் – நிரோஷ் அழைப்பு

தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் – நிரோஷ் அழைப்பு

0
image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்  தவிசாளர் தியாகராஜா நிரோஷ், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களால் முன்னெடுக்கப்படும் நீதி கோரும் மாநாட்டுக்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், உள்நாட்டில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வெள்ளை வான் கடத்தல்களாலும் அரச படைகளினாலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தேர்தல் காலத்தில் பல கதைகளைக் கூறிய போதிலும், எதையும் நீதியாகச் செய்யவில்லை.” – என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்போதைய அரசு “நாம்தானா பிள்ளைகளைக் கடத்தினோம்” என முதிர்ச்சியற்ற முறையில் நழுவிக்கொள்வதுடன், இராணுவத்தினரையும் ராஜபக்ஷக்களையும் பாதுகாக்கும் உத்தியையே கையாண்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால நிதி ஊழல்களுக்கும் சிங்கள மக்களைப் பாதித்த படுகொலைகளுக்கும் விசாரணை நடத்தும் அரசு, தமிழ் மக்கள் மீதான எந்தவொரு படுகொலைக்கும் கடத்தலுக்கும் இதுவரை நீதி விசாரணையை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.

“சர்வதேச அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்காக அரசு பல்வேறு நீதிக்குப் புறம்பான உபாயங்களைக் கையாண்டு, அரச திணைக்களங்கள் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை உண்மைக்குப் புறம்பான நிகழ்ச்சி நிரல்களின் ஊடாக ஏமாற்றி அவர்களின் கோப்புகளை மூடுவதற்குக் காய் நகர்த்தி வருகின்றது.

எனவே, அத்தகைய அரச கபடங்களுக்கு இடமளிக்காது, தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்துக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கும் சகல தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” – என்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலும் வலியுறுத்தினார்.

Source: https://samugammedia.com/everyone-should-cooperate-with-the-conference-demanding-justice-for-mothers—niroshs-call-1787922936

NO COMMENTS

Exit mobile version