Home இலங்கை அனைத்து அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த அரசு பரிசீலனை

அனைத்து அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த அரசு பரிசீலனை

0
image

அனைத்து அரச பணியாளர்களினதும் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய சட்டத்தின்படி, பொதுவான அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், சில விசேட தொழில்களில் அதற்கு மேற்பட்ட ஓய்வுபெறும் வயது நடைமுறையில் உள்ளது.

அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 61 வயது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கு 63 வயது, உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு 65 வயது மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு 63 வயது ஓய்வுபெறும் வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து 67 ஆக உயர்த்துவதற்கான யோசனையும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டம் தொடர்பாக அண்மைக்காலமாக சமூகத்தில் பரவலான விவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், பல தொழில்முறை சங்கங்கள் தங்களது உறுப்பினர்களின் ஓய்வுபெறும் வயதையும் உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

இந்தக் கோரிக்கைகள் மற்றும் சில பொதுநிறுவனங்கள், சபைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி (EPF), தொழிலாளர் நம்பிக்கை நிதி (ETF) உள்ளிட்ட நலன்களை மேலும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கும் வாய்ப்பையும் கருத்தில் கொண்டு, அனைத்து அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நடவடிக்கையை அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Source: https://samugammedia.com/government-considers-raising-the-retirement-age-of-all-government-employees-to-65-1784185926

NO COMMENTS

Exit mobile version