Home இலங்கை அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்ய வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!

அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்ய வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!

0
image

எதிர்வரும் ஆண்டிறுதியில் எதிர்பார்க்கப்படும் கனமழைக்கு முன்னதாக, மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நன்னீர் மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் துறைசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் இன்று (17.06.2026) புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கிய கௌரவ ஆளுநர், ‘இந்த ஆண்டிறுதியில் கனமழை எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, மழைகாலத்துக்கு முன்னதாகவே திட்டங்களை நடைமுறைப்படுத்தி முடிப்பதற்கு அனைத்துத் திணைக்களங்களும் உறுதியான நிலைப்பாட்டைக் காண்பிக்க வேண்டும்,’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைத் துரிதப்படுத்துவதற்கான பொருத்தமான அறிவுறுத்தல்களும் ஆளுநரால் வழங்கப்பட்டன.

பின்னர், விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடிப் பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்றிட்ட முன்னேற்றங்கள் தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டன.

இதன்போது, அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் களத்தில் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகள் தொடர்பில் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்விடயங்களை விரிவாக ஆராய்ந்த ஆளுநர், அச்சிக்கல்களைத் தீர்த்து வேலைத்திட்டங்களைச் சீராக முன்னெடுப்பதற்கான உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.

இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம், திட்டமிடல், நிதி மற்றும் பொறியியல்), மாகாணப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source: https://samugammedia.com/northern-provincial-governor-urges-speedy-completion-of-development-projects-1781691075

NO COMMENTS

Exit mobile version