நுவரேலியா – வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில், மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வரும் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு வெளியாட்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
நேற்று (07) இரவு சுமார் 10 மணியளவில் பிரிதொரு பகுதியில் இருந்து வேன், ஆட்டோக்களில் வந்த நபர்கள் குறித்த சிலையை அங்கு நிறுவுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை கிராம மக்கள் அவதானித்ததைத் தொடர்ந்து, உடனடியாக ராகலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரின் உதவியுடன், புத்தர் சிலையை அங்கு நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் மற்றும் காவல் தெய்வ வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களின் அனுமதியின்றி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் குறித்த இடத்தில் சிலையொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
