Home இலங்கை அர்ச்சுனாவின் சர்ச்சைக் கருத்து: பொலிஸார், CID விசாரணை ஆரம்பம்! அமைச்சர் அறிவிப்பு

அர்ச்சுனாவின் சர்ச்சைக் கருத்து: பொலிஸார், CID விசாரணை ஆரம்பம்! அமைச்சர் அறிவிப்பு

0
image

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொதுஜன பெரமுனவின் மேடையிலும் அதற்கு வெளியிலும் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் சட்டத்துக்கு புறம்பாக அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் எவரேனும் கருத்துகளை வெளியிட்டால், அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

அதேவேளை, கடந்த தேர்தல்களின் போது புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் அல்லது டயஸ்போரா தரப்பினரால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டையும் அமைச்சர் முற்றாக நிராகரித்தார்.

பொதுஜன பெரமுனவின் மேடையில் நின்றுகொண்டு இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தும், அவர்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அர்ச்சுனாவைத் தவிர புதிய நபர்கள் எவரும் குறித்த கூட்டத்தில் இணையவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவாகியுள்ள போதிலும், பழைய அரசியல்வாதிகள் தங்களது பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Source: https://samugammedia.com/archanas-controversial-opinion-police-cid-investigation-begins-minister-announcement-1789539019

NO COMMENTS

Exit mobile version