நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது.
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, தலா 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்று சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டார்.
இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணைகளில், கலவரத்தின் போது கைதிகள் சிறைச்சாலையின் சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள கூர்மையான ஆயுதங்களைக் கையாண்டுள்ளமை தெரியவந்துள்ளது.அத்துடன், சமையலறையிலிருந்த தேங்காய்களை அதிகாரிகள் மீது வீசித் தாக்குதல் நடத்தியுள்ளமையும் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்தப் புதிய நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மற்றும் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒரு குழுவினர் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டனர். இவ்வாறு மாற்றப்பட்ட கைதிகளை, அவர்களது வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் அந்தந்த நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைத் தவிர்க்கும் நோக்கிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடரும் பொருட்டும், காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் கைதிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
