Home இலங்கை இத்தாலியில் கால்வாயில் மிதந்த இலங்கையரின் சடலம்

இத்தாலியில் கால்வாயில் மிதந்த இலங்கையரின் சடலம்

0
image

இத்தாலியின் மிலன் மாகாணம், கோர்சிகோ (Corsico) பகுதியில் உள்ள ‘நாவிளிகோ கிராண்டே’ (Naviglio Grande) கால்வாயில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்த  38 வயதுடைய ஷான் ஹேமல் கோமிஸ் முஹந்திரம்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (16) முதல் தனது கணவரைக் காணவில்லை என அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையிலேயே, நேற்று இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கால்வாய் நீரோட்டத்தில் மனித உடலொன்று அடித்துச் செல்லப்படுவதைக் கவனித்த பாதசாரிகள், உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் சடலத்தை மீட்டனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, அந்த நபர் பல மணி நேரமாகத் தண்ணீரில் சிக்கியிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் வன்முறைகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதற்கான எந்தவொரு வெளிப்புற அடையாளங்களும் காணப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும் நோக்கில் அவர் குளிக்க முயன்று தண்ணீருக்குள் விழுந்தாரா, அல்லது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, சடலம் மீதான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Source: https://samugammedia.com/the-body-of-a-sri-lankan-floating-in-a-canal-in-italy-1781839213

NO COMMENTS

Exit mobile version