Home இலங்கை இரு பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க இலட்சக்கணக்கில் இலஞ்சம்! சிக்கிய அதிபர்

இரு பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க இலட்சக்கணக்கில் இலஞ்சம்! சிக்கிய அதிபர்

0
image

இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காலி, உனவட்டுனை – ருமஸ்ஸல பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் நேற்று (07) காலி, ஹபராதுவ பகுதியில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதலில், இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையில் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 6 இலட்சம் ரூபாய் பணத்தை அதிபர் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அந்தத் தொகை 3 இலட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டதாகவும், அதில் ஒன்றரை இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்தில் ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மற்றைய பிள்ளையை 8ஆம் தரத்தில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை இலட்சம் ரூபாயில் 50 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, அந்தப் பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இரு பிள்ளைகளையும் பாடசாலையில் சேர்ப்பதற்கான பணிகளை செய்து கொடுத்தமைக்காக மேலும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிபர் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பணத்தை வழங்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து நீக்கிவிடுவதாகக் கூறி, அவ்வாறு செய்யாமல் இருப்பதற்காக கோரப்பட்ட 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொள்ள முயன்றபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிபர் இன்று (08) காலி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Source: https://samugammedia.com/bribery-worth-lakhs-to-get-two-children-admitted-to-school-principal-caught-1788842728

NO COMMENTS

Exit mobile version