தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது இரு மகன்கள் காயமடைந்துள்ளனர்.
தம்புள்ளை கபுவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தனது மூத்த மகனுக்கான நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்குத் தேவையான துணிமணிகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரத்திற்குச் செல்ல பேருந்துக்காக வீதியோரத்தில் காத்திருந்துள்ளார்.
இதன்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக டிப்பர் வாகனம் வீதியோரத்தில் நின்றிருந்த பெண் மற்றும் அவரது இரு மகன்கள் மீது மோதியுள்ளது.
விபத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு மகன்களும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுடைய மூத்த மகன் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி நாடு திரும்பியிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மூத்த மகனுக்கான நேர்த்திக் கடனை நிறைவேற்ற தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தபோதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று (27) காலை சுமார் 9.10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
கவனக்குறைவாகச் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதியமைளால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், பின் இருக்கையில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
Source: https://samugammedia.com/consecutive-accidents-in-sri-lanka–two-dead-four-injured-1785140826
