கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்களின் (STDs) பரவல் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த நிலைமைக்கு எதிராக அரசாங்கம் பல்துறை கூட்டுத் திட்டங்களை அவசரமாக ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த தொற்றுகளுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது மிகுந்த கவலைக்குரிய விடயம் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை கட்டுப்படுத்துவதற்காக, கல்வி அமைச்சராகவும் செயற்படும் பிரதமர் தலைமையில், கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் இணைந்து அண்மையில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி மற்றும் சமூக நலத்துறைகளை ஒருங்கிணைத்து இளம் தலைமுறையினரை பாதுகாக்கும் வகையில் கூட்டுச் செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் போதிய விழிப்புணர்வு மற்றும் சரியான புரிதல் இல்லாமையின் காரணமாகவே இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, மருந்து சிகிச்சையை விடவும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வே முக்கியமானது என அரசாங்கம் கருதுகிறது.
நாட்டில் எச்.ஐ.வி தடுப்பு மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ள போதிலும், நோய் பரவாமல் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைய, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இலக்காகக் கொண்டு விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
