சிறைச்சாலையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக, அங்குள்ள கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிறைச்சாலைக்குள் நிலவும் சூழலை அவதானிப்பதற்காக விமானப்படையின் ட்ரோன் (Drone) கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ட்ரோன் கருவிகளும், பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், அங்குள்ள பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்த மேலதிக இராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி இந்த வன்முறைச் சம்பவங்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் பலத்த காயமடைந்த 4 சிறை அதிகாரிகள் உட்பட 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நள்ளிரவில் அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சூழல், இன்று மீண்டும் கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் சீர்குலைந்தது.
இன்று காலை காலை உணவை வழங்குவதற்காக அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் சென்றபோது, கைதிகளின் அந்த இரு குழுக்களும் மீண்டும் மோதிக்கொண்டன.அதிகாரிகள் தலையிட்டு ஒழுங்கை நிலைநாட்ட முயன்றபோது, கைதிகளால் தாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், கைதிகள் அதிகாரிகளை சிறைச்சாலையின் பிரதான வாயில் வரை துரத்திச் சென்று தொடர்ந்து தாக்கியதுடன், நுழைவாயிலை உடைத்துக்கொண்டு வெளியேறவும் முயன்றனர்.
நுழைவாயிலில் பணியில் இருந்த அதிகாரிகள், கைதிகள் நுழைவாயிலை சேதப்படுத்துவதைத் தடுக்கவும் அவர்களை அப்பகுதியிலிருந்து அகற்றவும் முயன்றனர். ஆனால் அவர்களும் கைதிகளின் பெரிய குழுவொன்றால் மீண்டும் தாக்கப்பட்டனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு, வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் ஏற்பட்ட சூழலில் கைதிகள் ஆயுதங்களைக் கவர்ந்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று நள்ளிரவிலேயே ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த துப்பாக்கிகளை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
இந்த மோதல் ஏற்பட்ட சிறைச்சாலையில் பல்வேறு குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலக உறுப்பினர்கள் இருப்பதாகவும் இந்த மோதலை சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவரே வழிநடத்தியதாகப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவர் ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி ஆவார். கூரிய ஆயுதங்களால் தாக்குதல், கொள்ளைச் சம்பவங்கள், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன.
2016-ஆம் ஆண்டு நாரம்மல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவரையும் அவரது உதவியாளரையும் தாக்கி, கட்டிவைத்துவிட்டு, தூபிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலும் இவர் மீது வழக்கு உள்ளது. நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இவர் தற்போது நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
