Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் அரசியல் மயமாக்கியுள்ளது: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் அரசியல் மயமாக்கியுள்ளது: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

0
image

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அரசியல் மயமாக்கியுள்ளதுடன், உண்மைகளை மூடிமறைக்க முற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடளாவிய ரீதியிலான “கடமைக்காக” பேரணித் தொடரின் ஒரு அங்கமாக, தோப்பூர் பகுதியில் நேற்று (11) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இன்று முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளை மூடிமறைப்பதற்காக, அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தற்போதைய அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கி, அவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

 

அவ்வாறு அதிகாரிகளைப் பாதுகாத்து, விசாரணைகளை அரசியல் மயமாக்குவதன் மூலம், நாட்டில் வெவ்வேறு மதங்களுக்கு இடையில் தேவையற்ற மோதல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இதுவே இந்த அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.”

“அரசாங்கம் தனது சொந்த அரசியல் இலாபத்திற்காக எவை தேவையோ, அவற்றை மட்டுமே தெரிந்தெடுத்துச் செய்கிறது. பொதுமக்களாகிய உங்களையும் எங்களையும் ஒருவருக்கொருவர் வெறுப்பேற்றி, கோபமடையச் செய்து, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு வருகிறது.

மக்களிடையே மோதல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தி, அதன் மூலம் குளிர்காய நினைக்கும் இந்த அரசாங்கத்தின் குறுகிய கால அரசியலுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை” என்றும் நாமல் ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டினார்.

இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேனுக கமகே உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகளும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/the-government-has-politicized-the-easter-sunday-attack-investigations-namal-rajapaksa-alleges-1781256017

NO COMMENTS

Exit mobile version