உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் வெகுஜன தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தீர்ப்பை 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் உள்ள முழுமையான உண்மையை வெளிக்கொணரும் நடவடிக்கைகளின் முடிவாகக் கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (22) இரவு நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜூட் கிருஷாந்த, தாக்குதலுக்கு உதவியதாகவும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு பகுதியினருக்கு தற்போது நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய சிறப்பு நீதாயவிசாரணை அமர்வு, இந்த வழக்கில் 24 பிரதிவாதிகளில் 15 பேரை குற்றவாளிகளாகக் கண்டறிந்துள்ளதுடன், 9 பேரை விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்டதாகக் கூறப்படும் பிரதான சதித்திட்டக்காரர்கள் யார் என்பதை கண்டறிவது மிகவும் அவசியமானது என அருட்தந்தை ஜூட் கிருஷாந்த வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தாக்குதலுக்கு வழிவகுத்த காரணிகள், அதற்கு உதவியவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினர் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், விசாரணைகளில் வெளிவரும் ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும் என்பதே திருச்சபையின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
