“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலாலும் அதன் பின்னரான சூழலாலும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நியாயமான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், முறையான விசாரணைகளின்றி தன்னிச்சையாக நபர்களைக் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு விசேட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டத்தின்படி செயல்படுங்கள்” என்ற பிரதான வாசகப் பின்னணியில் நின்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசின் சில நகர்வுகள் வெறும் அரசியல் பழிவாங்கலாகவே பார்க்க முடிகின்றது என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்தக் கோரத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதைச் சான்றுகளுடன் வெளிக்கொண்டு வருவதை விடுத்து, தங்களுக்குப் பிடிக்காத யாரையாவது ஒருவரைக் கைது செய்து, அவரே பிரதான சூத்திரதாரி எனப் பகிரங்கமாகத் தீர்ப்பளிக்கவே தற்பொழுது சில தரப்பினர் திட்டமிட்டு முயற்சித்து வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராகத் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி, “நாங்கள் இங்கு சுரேஷ் சலே என்ற தனிநபரைப் பற்றி மட்டும் பேசவில்லை. நாட்டின் எந்தவொரு பிரஜையாக இருந்தாலும், அவர் பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக முறையான மற்றும் சட்டபூர்வமான விசாரணைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். எவ்வித அரசியல் உள்நோக்கமும் இன்றி, நாட்டின் பொதுச் சட்டத்துக்கு அமையவே அனைத்து நகர்வுகளும் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மிகவும் தெளிவாக வலியுறுத்துகிறோம்.” – என்றார்.
