இலங்கையில் உரிமமின்றி இயங்கி வந்த 146 இணையவழி சூதாட்ட (Betting) தளங்களுக்கான அணுகலை முடக்குமாறு, உள்நாட்டு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் பண்டார ஹேரத், நேற்றுமுன்தினம் 24 இணையவழி பந்தய தளங்களும், நேற்று மேலும் 122 இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனுமதியற்ற இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி பந்தய இணையதளங்கள் சில உட்பட முதற்கட்டமாக 24 இணையதளங்களுக்கான அணுகல் நேற்று தடை செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் இணையவழி சூதாட்டம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அதனை நடத்தும் நிறுவனங்கள் உரிய அதிகாரிகளிடம் பதிவு செய்து, சட்டப்படி உரிமம் பெற்று, அரசுக்குரிய கட்டணங்களைச் செலுத்துவது கட்டாயமாகும்.
இதன் தொடர்ச்சியாக, உரிமமின்றி இயங்கி வந்த மேலும் 122 இணையதளங்களும் இன்று முடக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 146 சூதாட்ட இணையதளங்களுக்கான அணுகல் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிமமற்ற இணையவழி சூதாட்ட தளங்களில் பணம் முதலீடு செய்வது சட்டவிரோதமானது என்பதால், அவ்வாறான தளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Source: https://samugammedia.com/146-unauthorized-gambling-websites-blocked-in-sri-lanka-1786078444
