Home இலங்கை ஒற்றையாட்சி தமிழர்களை மட்டுமன்றி முஸ்லிம், மலையக மக்களின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் – கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சி தமிழர்களை மட்டுமன்றி முஸ்லிம், மலையக மக்களின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் – கஜேந்திரகுமார்

0
image

“ஒற்றையாட்சி முறைமையானது தமிழினத்தின் எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எமது முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும்.” – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் எழுதிய ‘தமிழன் கனவு’ நூலின் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. ஆசிரியர் தருமலிங்கம் சுரேஷ் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கஜேந்திரகுமார் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘தமிழன் கனவு’ என்ற சொல்தொடரைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர், கனவு காண்பதற்குத் தமிழன் இந்தத் தீவிலே வாழவேண்டும். தமிழன் என்ற வார்த்தைக்கு ஆழமான கருத்து உள்ள நிலையில், எமது கலாசாரம், மொழி மற்றும் நிலப்பரப்புடன் தொடர்புடைய கூட்டு வாழ்க்கைக்கான எதிர்காலமே இன்றைக்குக் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலை இன்றைக்கு நேற்றுத் தொடங்கியதல்ல. கடந்த 77 வருடங்களாகத் தொடர்கின்றது. இதற்கு மூலக்காரணமாக இந்த நாட்டின் ஆட்சி முறைமையே திகழ்கின்றது.

1948ஆம் ஆண்டிலிருந்து 75 சதவீத சனத்தொகையைக் கொண்ட சிங்கள பௌத்த மக்கள், எஞ்சிய 25 சதவீத தமிழ் பேசும் மக்களின் இருப்பைக் கண்டு அஞ்சி, தமக்குக் கிடைத்த ஒற்றையாட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களின் அடையாளத்தை அழிக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டனர்.

நூலாசிரியர் சுகாஷ் தனது சட்ட அறிவைக்கொண்டு நூலில் ஒற்றையாட்சி தொடர்பில் பதிவு செய்துள்ள ஆழமான கருத்துகள் மிகவும் பெறுமதியானவை. இந்த ஒற்றையாட்சி தமிழினத்தின் எதிர்காலத்தை மாத்திரமன்றி, முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தும்.

போர்க்காலத்தில் தமிழர்களை ஓரம் கட்டுவதற்காகத் தமிழ் பேசும் மக்களைச் சிங்களத் தரப்பு பிரித்தாள முயன்றது. தமிழர்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டதாகக் கருதும் பேரினவாதம், அடுத்த கட்டமாக முஸ்லிம் மக்களின் மீதும் தனது தாக்கத்தைத் தொடங்கியுள்ளது. ஆகவே, ஒற்றையாட்சியின் ஆபத்துகளை இளைய தலைமுறைக்குத் தெளிவுபடுத்தும் இத்தகைய நூல்களை அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும். – என்றார்.

Source: https://samugammedia.com/a-unitary-state-would-call-into-question-the-very-existence-of-not-only-the-tamils-but-also-the-muslim-and-up-country-communities–gajendrakumar-1789982386

NO COMMENTS

Exit mobile version