செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் எனும் பெயரிலான ஓர் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026.10.15 ஆம் நாள் முதல் 2026.10.18 ஆம் நாள் வரை கனடா நாட்டில் தொரண்டோ மாநகரில் நடைபெற உள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (14) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வடகிழக்கு விவசாய ,பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றை இதன் மூலம் மேம்படுத்தவும் இவ் ஆய்வின் நோக்கமாக காணப்படுகிறது.
இம்மாநாடானது, உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துச் செம்மொழித் தமிழ், செய்யறிவு, மெய்ப் பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல், வரலாறு, குமுக-பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளின் இணையிசைவுகளை ஆராய்வதற்கான அறிவியற் தளமாக அமைகிறது.
மேலும், தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும் இன்றைய உலகில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
இம்மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரைகள் அளிக்குமாறு ஆய்வாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு அமைய; உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்களிடமிருந்து 497 ஆய்வுக் கட்டுரைச் சுருக்கங்கள் வந்துள்ளன.
இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து கூடுதலான கட்டுரைகள் வந்துள்ளன.
இம்மாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து 20 கட்டுரையாளரும் இலங்கையிலிருந்து 20 கட்டுரையாளரும் பிற நாடுகளில் இருந்து 20 கட்டுரையாளரும் அழைக்கப்படுவர்.
மாநாட்டில் பங்கேற்கும் கட்டுரையாளரைத் தேர்ந்தெடுக்க; பல நாடுகளில் உள்ள பல்கலைக் கழக பேராசிரியர்களைக் கொண்ட ஐந்து வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவினால் தேர்வு செய்யப்படும் கட்டுரையாளர்களுக்கு 2026 ஜூலை மாதத் தொடக்கத்தில் தேர்வு செய்யப்பெற்ற விவரம் அனுப்பி வைக்கப்படும்.
மாநாட்டுக்கு உரிய ஆய்வுக் கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பியுள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
