எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களை சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இன்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
பல ஆண்டுகளாக தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் காணப்படுவதால் வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும், பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும், மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமது நிலங்களை விடுவிப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், நடைமுறையில் தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனால், தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேறி இயல்பான வாழ்க்கையை முன்னெடுப்பதே தங்களது ஒரே கோரிக்கை என தெரிவித்த மக்கள், இதற்காக எந்தவித வன்முறையுமற்ற அமைதிவழிப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், தமது காணிகளை விடுவிப்பதற்கான உறுதியான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், மக்களின் பூர்வீக நிலங்களை நீண்டகாலமாக அரச படைகளின் பயன்பாட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக, அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளித்து, பலாலி மக்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.
