மன்னார் வடக்கு கடற்பகுதியில் விபத்தில் சிக்கி, எரிபொருள் இன்றி கடலில் மிதந்துகொண்டிருந்த ஒரு நாள் மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள், கடற்படையினரால் இன்று (21) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 19ஆம் திகதி இரண்டு மீனவர்களுடன் புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடிப் படகு மீண்டும் துறைமுகத்திற்குத் திரும்பாத நிலையில், அதனைக் கண்டுபிடிப்பதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறு மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக செயற்பட்ட குறித்த ஒருங்கிணைப்பு மையம், அந்த கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியது.
அத்துடன், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளுக்கும் தகவல் வழங்கப்பட்டது.
இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின்போது, தலைமன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் எரிபொருள் இன்றி செயலிழந்து மிதந்துகொண்டிருந்த குறித்த ஒரு நாள் மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, படகில் இருந்த இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், மீனவர்களும் அவர்களது படகும் தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்டன.
தலைமன்னாரில் மீனவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளும் வழங்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கக்கூடிய கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அவசர நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
