இந்தோனேசியாவின் அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, கொழும்பு மற்றும் ஜகார்த்தாவுக்கு இடையிலான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இயக்கப்படவிருந்த UL 364 கொழும்பு – ஜகார்த்தா மற்றும் UL 365 ஜகார்த்தா – கொழும்பு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பால் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளுக்கு சாம்பல் மற்றும் சிலிக்கா துகள்கள் பரவியுள்ளதால், அவை விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையை நோக்கிய மேற்கு வான்வழிப் பாதை உள்ளிட்ட பல பகுதிகளில் விமானப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பும், இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளிப் பகுதிகளும் இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையால், சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து வந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நேற்று இரவு மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே சேவைகளை வழங்கும் பல மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்களும் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
மேலும், இந்தோனேசியாவின் பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சர்வதேச விமானப் போக்குவரத்திலும் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் மாற்று வான்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி சேவைகளை முன்னெடுத்து வருகின்றன.
