Home இலங்கை எல் நினோ தீவிரமடைந்தால் ஆபத்து – தயாராக இருக்குமாறு எச்சரிக்கை

எல் நினோ தீவிரமடைந்தால் ஆபத்து – தயாராக இருக்குமாறு எச்சரிக்கை

0
image

உலகளாவிய ரீதியில் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ (El Niño) நிகழ்வு இம்முறை கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு ஆரம்பித்துள்ளதாகவும், தற்போது அது பலவீனமான நிலையில் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் தீவிரமடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சியான வானிலை நிலவி வருவதுடன், சில பிரதேசங்களில் நீர்நிலைகள் வற்றிப்போயுள்ளதால் பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் பெரும் போக நெற்செய்கையை ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தற்போதைய வறட்சியான வானிலை நீங்கும் வரை பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எல் நினோ காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ மையம் ஏற்கனவே தயாரித்து வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளுக்கான அரசாங்கத்தின் தயார்நிலை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தினால் சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிதியம் இதுவரை முறையாக செயற்படுத்தப்படவில்லை என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் மேலும் தெரியவந்துள்ளது.

Source: https://samugammedia.com/warning–be-prepared-if-el-nino-intensifies-1785405745

NO COMMENTS

Exit mobile version