Home இலங்கை எல் நினோ வறட்சிக்கு தயாராகும் அரசு; குடிநீர் விலைக்கும் கட்டுப்பாடு

எல் நினோ வறட்சிக்கு தயாராகும் அரசு; குடிநீர் விலைக்கும் கட்டுப்பாடு

0
image

நாட்டில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களுக்கான விலைகளில் நிலவும் முறைகேடுகளை தவிர்த்து அவற்றுக்கு முறையான கட்டுப்பாடு விலையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான புதிய தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சந்தையில் 500 மில்லி லீட்டர் அளவிலான குடிநீர் போத்தல்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக இரவு நேர உணவகங்கள் பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் பொதுமக்களிடம் அதிக விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

  

புதிதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த தேசிய குடிநீர் விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் மூலம், நுகர்வோருக்கு நியாயமான விலையில் குடிநீர் கிடைக்கப் பெறும் என்றும், தன்னிச்சையாக விலைகளை உயர்த்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ வறட்சி நிலைமை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நீர் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் அனைத்துப் பிரிவுகளையும் தயார்படுத்தியுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களையும் ஒன்றிணைத்து முதற்கட்டக் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. 

அத்துடன், ஜனாதிபதியும் இந்த நிறுவனங்களை நேரில் அழைத்து, அவர்களின் தயார்நிலை மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.

 

எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி முதல் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பங்களிப்புடன், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கீழ் மட்ட அதிகாரிகள் வரை வறட்சி அபாயம் குறித்து விழிப்புணர்வூட்டும் விசேட திட்டமொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 எந்தெந்தப் பகுதிகளில் எந்தக் காலப்பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்பது குறித்து அதிகாரிகள் முன்கூட்டியே தயார்படுத்தப்படுவர். மேலும், இந்த அனர்த்தச் சூழலை எதிர்கொள்வது குறித்து அனைத்துத் திணைக்களங்களும் தங்களின் எழுத்துப்பூர்வமான விசேட திட்டங்களைத் தயாரித்து வருகிறது என்றார்.

Source: https://samugammedia.com/el-nino-government-prepares-for-drought-controls-on-drinking-water-prices-1781585206

NO COMMENTS

Exit mobile version