நோர்வூட் பிரதேச செயலகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஒதுக்கப்படும் ‘அஸ்வெசும’ நிவாரண நிதியில் 16 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் இரண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் போய் சேர வேண்டிய இந்தச் சமூக நலன்புரித் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது மற்றும் உறவினர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாகப் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இந்த மாபெரும் நிதிச் சூறையாடலில் மொத்தம் 11 அரச ஊழியர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
