Home இலங்கை கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு: கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு: கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

0
image

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், முன்னர் சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் தகவல்களின்படி, திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய குறித்த நபர், 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் கட்டுநாயக்க நகர பாதுகாப்புப் பிரிவில் சிவில் பாதுகாப்புப் படையின் கீழ் கடமையாற்றியுள்ளார்.

சந்தேகநபர் நீர்கொழும்பு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் திவுலப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யும் போது அவரிடமிருந்து 31 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், போக்குவரத்து பொலிஸார் சோதனைக்காக நிறுத்துமாறு அறிவித்த மோட்டார் சைக்கிளொன்றை செலுத்திச் சென்ற இருவரை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.

தேவமொட்டாவ பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளை கைவிட்டு இருவரும் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கி, அவரது துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளார்.

பின்னர் அருகிலுள்ள வீதித் தடுப்பில் கடமையில் இருந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளொன்றை பறித்துக் கொண்டு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து விசேட பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரியிடமிருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்குள்ளான மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/kattunayake-shooting-information-released-about-the-arrested-suspect-1784179216

NO COMMENTS

Exit mobile version