Home இலங்கை கதிர்காமம் பக்தர்களுக்கு உணவு வழங்கிவிட்டு திரும்பியவர் பலி – பொத்துவிலில் சோகம்

கதிர்காமம் பக்தர்களுக்கு உணவு வழங்கிவிட்டு திரும்பியவர் பலி – பொத்துவிலில் சோகம்

0
image

அம்பாறை, பொத்துவில் – அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த வேன் சாரதி, மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மார்க்கண்டு ஜெயநாதன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக உகந்தை பகுதியில் உணவு தயாரித்து வழங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே அவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த குறித்த வேன், ஊரணி சந்திக்கு அருகில் சென்றபோது எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. மோதலின் தாக்கத்தில் இரு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்துள்ளன.

விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்ததுடன், வேன் சாரதியும் முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பிரதேச மக்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் வேன் சாரதியின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்போது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி தொடர்ந்தும் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், விபத்து தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/kadhirgamam-devotee-who-fed-people-has-passed-away—sorrow-in-pottuvil-1783679461

NO COMMENTS

Exit mobile version