Home இலங்கை கபரகல மண்சரிவால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு

கபரகல மண்சரிவால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு

0
image

பதுளை மாவட்டம், கபரகல தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு காணி உரிமையுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வை முன்னிட்டு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மலையக மக்களின் காணி உரிமையும் பாதுகாப்பான வீட்டுரிமையும் வெறுமனே கோரிக்கைகள் அல்ல, அவை அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமைகள் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மலையகச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பல தசாப்தங்களாக உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, சொந்த நிலமும் சொந்த முகவரியும் இன்றி வாழ்ந்து வந்த எமது மக்களுக்கு, இன்று அவர்களின் சொந்த மண்ணிலேயே உரிமையுடன் வாழக்கூடிய பொன்னான சூழல் உருவாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் அளிக்கின்றது.

200 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வந்த எமது மலையகச் சொந்தங்களுக்கு காணி உரிமையும் பாதுகாப்பான வீட்டுரிமையும் வெறும் கோரிக்கைகள் அல்ல, அவை அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமைகளாகும். அந்த உரிமைகளை எமது மக்களுக்குப் பெற்றுத் தருவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் செயற்பட்டு வருகின்றது.

மலையக மக்களின் வாழ்வியல் விடிவுக்காக ‘ஹட்டன் பிரகடனத்தில்’ நாம் வழங்கிய அனைத்து உறுதிமொழிகளையும் வார்த்தை மாறாமல் நிறைவேற்றுவோம். அதற்கான ஒரு வரலாற்றுச் சான்றாகவே இன்று மலர்ந்துள்ள ‘கபரகல நவோதய வீட்டுத் திட்டத்தை’ நாம் பார்க்கின்றோம்.

மண்சரிவு எனும் பேரழிவால் தங்களது வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்து, தொழிற்சாலைகளில் தஞ்சமடைந்து சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்ட எமது மக்களுக்கு, எமது அரசாங்கத்தின் நேரடி நிதிப் பங்களிப்பில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான காணி உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இது எமது மக்கள் மீது அரசாங்கம் கொண்டுள்ள ஆழமான அக்கறையையும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தளராத அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றது.

இன்று பதுளை மாவட்டம், கபரகல தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு காணி உரிமையுடன் புதிய வீடுகள் மற்றும் அவர்களுக்கான உத்தியோகபூர்வ விலாசங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பேரழிவின் வடுக்களைச் சுமந்து நின்ற நீங்கள், இன்று உங்கள் சொந்த வீட்டில், சொந்த முகவரியுடன் தலைநிமிர்ந்து வாழத் தொடங்குவதைக் காணும்போது, ஒரு மக்கள் பிரதிநிதியாக எனது மனம் நிறைகின்றது.

துயரங்கள் நிறைந்த காலம் மறைந்து, உங்கள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் மலரட்டும். புதிய நம்பிக்கையுடனும் கௌரவத்துடனும் உங்கள் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்றுள்ளது.

 

Source: https://samugammedia.com/new-houses-handed-over-to-50-families-affected-by-the-kabaragala-landslide-1787913215

NO COMMENTS

Exit mobile version