கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீனின் நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா சாரப்தீனின் வழிகாட்டலின் கீழ் இந்த சுகாதார பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். ரிஸ்பின் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை பொதுச் சந்தையில் திடீர் சுகாதார பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறிகள், பழங்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், சுகாதார விதிமுறைகளை மீறிய சில வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சந்தை வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள், சுகாதார விதிமுறைகள் மற்றும் அத்தியாவசிய சுகாதார ஆலோசனைகள் தொடர்பிலும் அதிகாரிகளால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
