Home இலங்கை களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில்! சந்தேகநபர் கைது

களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில்! சந்தேகநபர் கைது

0
image

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பகுதியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த 22ஆம் திகதி களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளது.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு பகுதிகளுக்கும் தகவல் வழங்கி விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (28) பாணமை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், திருடப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளும் சந்தேகநபரும் பாணமை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளில், சந்தேகநபர் மோட்டார் சைக்கிளை திருடிய பின்னர் அதன் இலக்கத் தகட்டை மாற்றி, கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸாரிடம் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் 8 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள், போலி இலக்கத் தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும்போது உரிய முறையில் பூட்டிப் பாதுகாப்பாக நிறுத்துமாறும், மோட்டார் சைக்கிள்களுக்கு பாதுகாப்புப் பூட்டுகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/stolen-motorcycle-recovered-in-kaluvanchikudi-suspect-arrested-1785309193

NO COMMENTS

Exit mobile version